பூட்டு

சனிக்கிழமை மணி இரவு 10.03, மழை சோ! வென்று கொட்டிக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில் இன்ஸ்டா ரீல் சத்தம் கூட சரியாகக் கேட்கவில்லை. 

மொபைல் வால்யூம் அதிகபட்சத்தில் இருந்தது அப்படியும் கேட்கவில்லை

சிங்கில் பெட்ரூம் ஃப்லாட்டில் 26 வயதான இனியன் பெட்டில் 360 டிகிரியில் எல்லா டிகிரியிலும் புரண்டு பார்த்துவிட்டான்.  இன்ஸ்டா ரீலும் போர் அடித்தது. என்ன செய்வது எனப் புரியவில்லை

ஃபோனில் நண்பர்கள் நம்பரை விரலால் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். ஒரு பெயர் வந்த பொழுது சடார் என்று பிரேக் போட்டு நின்றது விரல்

அடுத்த முனையில் ரிங் போகும் சத்தம் கேட்டது, ஹலோ சொல்லு மச்சான் என்றது அந்த குரல்

டேய்! உஸ் சரக்கு அடிக்கலாமா வரியா? கேட்டான் இனியன்

இல்ல மச்சான் நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வெளியே போகணும், சரிப்பட்டு வராது

சரி நான் உன் ரூமுக்கு வரேன், படம் பார்ப்போம் நீ குடிக்க வேண்டாம்

ஐயோ சொல்ல மறந்துட்டேன், ஒரு ரிபோர்ட் அனுப்பணும் பாஸ்க்கு அதுக்கு இனிமேல் தான் வேலையை ஆரம்பிக்கணும்

தனியாவா இருக்க? இனியன் கேட்டான்

ஆமா மச்சான் வேலை பார்க்கணும் ல ( இதை சொல்லும் போதே “ஏய் ஏய் என்ன பண்ணர அங்க” என்றான் உஸ், ஃபோனை சரியாக மூடாமல்)

யாரும் இல்லன்னு சொன்ன அப்புறம் யார் கூட பேசுற

பூனை..பூனை மச்சான் மடியில ஏற பார்க்குது என்றான் உஸ்

(அங்கே நடப்பதைப் புரிந்து கொண்ட இனியன்) உன் மடியில ஏறி யாரு வேலை பார்க்கராங்கனு புரியுது! எனச் சொல்லிவிட்டு எரிச்சலாக ஃபோனை கட் செய்தான்

ஃபோனை கீழே வைத்துவிட்டு எழுந்து போய் கதவைத் திறந்து பார்த்தான், இடது பக்கம் இருந்த பக்கத்து வீட்டின் இரும்பு கேட் உள் பக்கமாகப் பூட்டி இருந்தது. அதைக் கண்டு அவனுக்குள் மறுபடியும் ஒரு எரிச்சல்

நல்ல மழை, குளிர் வேற. இன்னைக்குனு பார்த்து இந்த பக்கத்து வீட்டுக் கதவு உள் பக்கமா பூட்டி இருக்கனுமா. நமக்கு நேரமே சரியில்லை

உள்ளே வந்து மறுபடியும் ஃபோனில் வீணை வாசிக்க ஆரம்பித்தான் இனியன்

ஓடும் பெயர்களில் ஒரு பெயரை “ஐ” என்று சேமித்து வைத்திருந்தான். சில வினாடிகள் அந்த பெயரை விரல்கள் தடவியது

டயல் செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனை

ஒரு நிமிடம் யோசித்த பின்.. டயல் செய்தான்….ரிங் போனது

ஹலோ! ஒரு பெண்ணின் குரல். “எப்படி இருக்கீங்க இனியன்”

ஓ! என் பெயர் கூட ஞாபகம் இருக்கா என்று ஆச்சரியமாகக் கேட்டான் இனியன்

“சில கஸ்டமர் பெயர் எல்லாம் ஃபோன்லேருந்து டெலீட் பண்றது இல்ல” என்றாள் அவள்.

குளிர் மழைக்கும் அதிக குளிராக இருந்தது அவள் குரல்

சரி விஷயத்துக்கு வருவோம், இப்போ நீ வர முடியுமா என் வீட்டுக்கு என்றான் இனியன்

இப்போ வா! என்று இழுத்தாள். “ஆமாம் இப்போதான்” என்றான் இனியன்

மழை வேற கொட்டுதே! என்றாள் அவள், வேற என்ன காரணம் நான் உன்ன கூப்பிட எனக் கொக்கி போட்டான் இனியன்

சரி நான் வர ரெடின்னா கூட எப்படி வருவேன் இந்த மழைல, அவள் முடிப்பதற்குள் “நான் வரேன்” என்று துள்ளினான் இனியன்

புரியுது! புரியுது! என்று ஒரு குட்டி சிரிப்புடன் சொன்னாள் அவள்

ரெயின் கோட், ஹெல்மெட் எல்லாம் மாட்டிக் கொண்டு, கையில் இன்னொரு ரெயின் கோட்டையும் எடுத்துக்கொண்டு பைக் சாவியுடன் புறப்பட்டான் இனியன்

மீண்டும் வீடு வரும் போது மணி 11.30, இரண்டு பேராக வந்தார்கள்

மாடிப் படியை ஏறி வந்தார்கள் ரெண்டு பேரும்

மங்கலான பல்ப் வெளிச்சத்தில் சாவியை பூட்டின் துவாரத்தில் விட துழாவிக் கொண்டிருந்தான் இனியன்

இனியனின் பின்னால் நின்றிருந்த அவள் பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள், இனியனின் வீட்டு கேட்டும் பக்கத்து வீட்டு கேட்டும் அருகருகே இருந்தது, ஆங்கில எழுத்தான L போல இருந்தது என்றும் சொல்லலாம்

ஒரு வழியாகப் பூட்டு திறந்தது, பின் கதவையும் அவசர அவசரமாய் திறந்தான்

“சீக்கிரமாக உள்ளே போ” என்றான் இனியன்

உள்ளே சென்று லைட் போட்டதும் அந்த பெண்ணின் உருவம் ஒளி பெற்றது

மாநிறம், ஒல்லியும் இல்லை தடிமனும் இல்லை. மெலிதான சேலை, ஒற்றை முந்தானை, மிகச்சிறிய கை வைத்த பிளவ்ஸ், வயிற்றைத் தாண்டி இடுப்பையும் தாண்டி சேலை சுற்றிக் கொண்டு கீழே விழாமல் இருந்தது

கொஞ்சமாக நனைந்திருந்த உடலைக் காய வைக்க ஒரு துண்டை நீட்டினான் இனியன்

அவள் சிறிதும் யோசிக்காமல், சேலையைக் கழற்றி கொடியில் போட்டாள்.

“என்ன நேரா காரியத்துல இறங்கிட்ட! பொறு பொறு” என்றான் இனியன்

“இல்லைங்க துணி ஈரம் ஆயிடுச்சு” என்றாள் அவள்

சரி சரி என்று கூறிக்கொண்டே உள்ளே சென்ற இனியன் ஒரு டீ சர்ட் மற்றும் சார்ட்ஸ் கொண்டு வந்து தந்தான்

அவளும் அவன் தந்த உடைக்குள் அங்கேயே அவன் முன்னால் மாறினாள். இனியனுக்குத் தன்னை அறியாமல் ஒரு கூச்சம் வந்தது

இருவரும் அமர, அவள் ஃபோனை ஒரு முறை எடுத்து பார்த்தாள். இனியனின் கண் அகண்டது.

லேட்ட்ஸ்ட் மாடல் ஆப்பிள் ஃபோன். அவனிடம் கூட அவ்வளவு புதிய மாடல் இல்லை

என்ன தொழில் ரொம்ப நல்லா நடக்குது போல. 

“ஏன் கேட்கரீங்க” என்றாள் அவள்

“இல்ல ஆப்பிள் லேட்ட்ஸ்ட் ஆ இருக்கே” என்றான்

அதுவா, ஒரு கஸ்ட்டமர் குடுத்தார் என்றாள் கண் சிமிட்டியபடி

என்னது கஸ்ட்டமர் குடுத்தாரா! நிஜமாவா! என்றான் இனியன்

“ஆமாங்க” என்றாள் அவள் ரொம்ப இயல்பாக

வியப்பில் இருந்து வெளியே வராத இனியன், “உன்ன பத்தி சொல்லேன்” என்றான்

என்ன பத்தி சொல்லனுமா, அப்போ இதுக்கா என்ன இவ்வளவு மழைல கூட்டி வந்தீங்க? எனக் கேலியாய் கேட்டாள்

இல்லைதான், இருந்தாலும் திடீர்னு ஒரு ஆசை, கேட்க கூடாதா என்று ஒரு கெஞ்சலாக் கேட்டான்

சொல்லலாமே என்று ஆரம்பித்தாள்….

நான் பி.எஸ்.சி படிச்சிருக்கேன், எனக்கும் குடும்பம் ன்னு ஒன்னு இருக்கு ஆனா அத பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. 

இந்தியா ல மேக்ஸிமம் ஸ்டேட்ஸ்க்கு போயிருக்கேன், ஃபாரின் டூர் கொஞ்சம் நாடுகளுக்கு போயிருக்கேன்

பி.எஸ்.சி படிச்சு கிட்டத்தட்ட 15 வருஷத்துல சம்பாத்தியம் பண்ணக் கூடியத கடைசி 7 வருஷத்துல சம்பாத்தியம் பண்ணியிருப்பேன்

இன்னும் கொஞ்சம் வருஷம் தான், அதுக்கு அப்புறம் எதாவது என்.ஜி.ஓ ல சேர்ந்து வாழ்க்கைய ஓட்டலாம் ன்னு இருக்கேன். ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள்

இனியனுக்கு வெட்கமாகவும், ஒரு விதத்தில் தன்னைப்பற்றி நினைத்தால் கேவலமாக இருந்தது

சரி இந்த அளவுக்கு வசதியாவும், விவரமாவும் இருக்கியே. அப்புறம் நான் கூப்பிட்டு எதுக்கு வந்த…வந்தீங்க அவனை அறியாமல் மரியாதை வந்தது

மரியாதைலாம் வேண்டாம். நான் தொழில் ஆரம்பிச்ச போது என்ன ஒழுங்கா நடத்தி, பணத்தை கரக்டா குடுத்த சில கஸ்டமர்கள் ல நீங்களும் ஒருத்தர்

அப்போ உன்ன எல்லோரும் சரியா நடத்த மாட்டாங்களா? என்று அப்பாவியாய் கேட்டான் இனியன்

நான் வாங்காத அடியா இல்ல பார்க்காத ரத்தமா. குடிக்க சொல்லுவாங்க, கஞ்சா, சிகரெட் ஏன் சில பேர் கொக்கைன் கூட ஏத்த சொல்லுவாங்க

ஐயோ இவ்வளவு இருக்கா இதுல என்றான் இனியன்

பணத்த குடுக்காம நடு வழியில இறக்கி விடுவானுங்க, ஒருத்தனுக்கு பதிலா..சரி விடுங்க என்றாள் சலிப்புடன்

அப்புறம் எப்படி இப்பவும் தைரியமா இந்த தொழில்ல இருக்க

அதுவும் ஒரு கஸ்டமர் சொல்லி குடுத்தது தான்

என்ன சொல்லி குடுத்தாரு, சொல்லேன் பிலீஸ்

அதுவா! எனக்கு ஃபேஸ் புக் ல அக்கவுண்ட் இருக்கு

புது ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வந்தா யாரு ரெபர் பண்ணாங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் ஓகே குடுப்பேன் காண்டாக்ட் டீடைல்ஸும் குடுப்பேன். அதுவும் ரெபர் பண்ணவங்க கிட்ட பேசிட்டுதான் குடுப்பேன்

ஹும்…நல்ல மெத்தட் தான்

அப்படி ரெபர் பண்ணி வரவங்க எல்லாரும் ஒழுங்க இருப்பாங்களா

ஒன்னு ரெண்டு சொத்தைங்க இருக்கும், அத மேனேஜ் பண்ணிடுவேன்

இப்படி உடம்ப விற்கிறோமேன்னு வருத்தப்பட்டு இருக்கியா?

முதல்ல இருந்தது, அப்புறம் தான் புரிஞ்சுது என்னோட கஸ்டமர்ஸ்லாம் என்னவிட படு மோசமான நிலைல இருக்காங்கன்னு

என்ன கூப்பிடற எல்லோரும் என் உடம்புக்காக கூப்பிடரது இல்ல. சில பேர் பேசிட்டு இருப்பாங்க, கூட கை பிடிச்சுட்டு நடப்பாங்க, சில பேர் அழ கூட செய்வாங்க என்றாள் சிரிப்புடன்

இதுக்கு மேல தாங்காது மா என்று கை கூப்பியபடி சிரித்தான் இனியன்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கூட ஒன்னு புக் பண்ணியிருக்கேன் அடுத்த வாரம் டெலிவரி என்று லேடஸ்ட்அப்டேட்டுடன் முடித்தாள்

வாவ்! என்றான் இனியன். ஒரு நிஜமான சந்தோஷத்தோடு

சரி என்ன பத்தி சொன்னேனே உங்கள பத்தி சொல்லுங்க என்றாள்

“என்ன சொல்லனும்” என்றான் சிறிது தயக்கத்துடன்

இந்த பழக்கம் எப்போலேர்ந்த்து? என்ன மாதிரி ஆள கூப்பிடற பழக்கத்த பத்தி கேட்டேன்

அதுவா. ஆபிஸ்ல சில பொண்ணுங்க இருந்தாங்க, எல்லா விஷயத்துலேயும் ஃப்ரீ டைப். அப்போ ஒரு வேகத்துல ஆரம்பிச்சது

அப்புறமா அவங்க எனக்குத் தேவையான எல்லா நேரத்தலையும் அவைலபில் ஆ இருக்கலை. அப்போ தான் உன்ன முதல் வாட்டி கூப்பிட்டேன். 

சரி பணம் செலவு ஆகுதேன்னு அங்க இங்கன்னு கைய வைக்க ஆரம்பிச்சேன்.

இப்போ எதுக்கு என்னோட தேவை ஏற்ப்பட்டுச்சு திடீர்ன்னு? அவளும் விடவில்லை மடக்கிக் கேட்டாள்

அதுவா காரணமா தான்! என்னோட ரெகுலர் பார்ட்னர் மொக்கை பண்ணிட்டாங்க

ஓ! லிவ் இன் பார்ட்னர் ஆ என்றாள் விடாப்பிடியாக

இல்லை! இல்லை! என்று குறுக்கே பாய்ந்தான் இனியன்

எங்க வீட்டுல சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்து நிப்பாங்க. மாட்டினா அவ்வளவு தான் மரணம் சம்பவிக்கும்.

அப்போ என்னதான் உங்க  ஃபார்முலா?

அதுவா….அது வந்து…என இழுத்தான் இனியன்

அது வந்து… என்று அவளும் சேர்ந்து கொண்டாள். சொல்ல கஷ்டம்னா வேண்டாம்

அப்படி இல்லை. சொல்றேன் என்று இனியன் சொல்ல, அவள் மிகவும் ஆர்வம் ஆனாள்

என்னோட பக்கத்து வீட்டுல ஒரு ஃபாமிலி இருக்கு. அதுல இருக்கர லேடியோட.. என ஒரு சின்ன அரேஞ்மெண்ட்

என் கிட்ட தயக்கப்பட்டு என்ன ஆக போகுது.. சொல்லுங்க

அந்த லேடியோட ஹஸ்பண்ட் கொஞ்சம் மொக்கை, அதுவும் இல்லாம ஊர் ஊரா ட்ராவல் பண்ற கேஸ் வேர

முதல்ல நார்மல் ஆ தான் பழகினோம், சாப்பாடு லாம் குடுப்பாங்க நானும் சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுவேன். 

கொஞ்சம் நாள்ல அவங்க ஆம்பள துணை இல்லமா நொந்து போய் இருக்காங்கன்னு தெரிஞ்சுது

அப்படியே நான் என்னோட வசதிக்கு யூஸ் பண்ணிக்க்ட்டேன்

இங்கயே இருக்கற்துனால ஈசியா போச்சு

சரி இன்னைக்கு என்ன ஆச்சு

எங்களுக்கு உள்ள ஒரு code சிஸ்டம் இருக்கு

அது என்ன கோட் சிஸ்டம்! ஆர்வம் இன்னும் அதிகம் ஆனது

ராத்திரில கேட் வெளி பக்கமா பூட்டி இருந்தா, அவங்க வீட்டுக்காரர் ஊர்ல இல்லை ன்னு அர்த்தம். 

உள் பக்கமா பூட்டு போட்டிருந்தா பேசாம போய் தூங்கலாம்..இது தான் code

பளிச்சென்று சிரித்தேவிட்டாள்..இனியன் முகத்தில் ஒரு அசடு வழிந்தது

இருவரும் கட்டிலில் படுத்தவாறே இன்னும் பல கதைகள் இரண்டு பக்கத்திலிருந்தும் மாறி மாறி சொல்லிக் கொண்டே போனார்கள்

நான் ஒன்னு கேட்டா கோச்சிக்க கூடாது என்றாள். கேள் என்றான்

உங்கள கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணும் உங்கள மாதிரி பல ஆண்கள பார்த்த பெண்ணா இருந்தா?

அந்த கேள்விக்குப் பதிலை யோசித்தான் இனியன், பதில் தேடி மனது ஆழமாய் பயணம் செய்தது

மணி அதிகாலை 4.30க்கு அலார்ம் அடித்தபோதுதான் இனியனுக்கு தெரிந்தது இருவரும் நன்றாக உறங்கிவிட்டது

பதறியவாறு எழுந்த இனியன் அவளையும் எழுப்பினான். இவள மாதிரி ஒரு பொண்ணு வந்த விஷயம் பக்கத்து வீட்டு ஆண்டிக்கு தெரிந்தால் அதுவும் கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலை அவனுக்கு

மறுமுறை துணியை மாற்றிக்கொண்டு புறப்பட்டாள்

இருட்டோடு வந்தவள் இருட்டோடு போக தயார் ஆனாள்

மெயின் டோர் மற்றும் மெயின் கேட்டை திறந்த இனியன் அவளை வெளியே போகச் சொன்னான்

ஏதோ மறந்துவிட்டோம் என உள்ளே சென்றான் இனியன்

மழை நின்று இருந்தது என்பதைக் கவனித்தாள் அவள். அதனால் யாரோ படி ஏறி வரும் சத்தம் கேட்டது

வருவது யார் என்று பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் படியின் பக்கம் தன் முதுகைக் காட்டிய வண்ணமே நின்றிருந்தாள்

படியில் ஏறி வருவது இனியனின் பக்கத்து வீட்டு ஆண்டியின் வீட்டுக்காரர் தான். கையில் ஒரு பொட்டியும் உடம்பின் குறுக்கே ஒரு பையும் தொங்கிக் கொண்டிருந்தது. ஊருக்குப் போய் திரும்பி வாருபவர் போல இருந்தது

அவர் ஏறி வரும் பொழுதே இந்த நேரத்தில் இப்படி ஒரு மாதிரியாகத் துணி உடுத்திய பெண் யாராக இருக்கும் என்ற யோசனையில் படி ஏறி வந்தார்

அவர் நெருங்க நெருங்க யார் என்ற ஆர்வம் தாங்காமல் அவள் திரும்பி பார்த்தாள். ஒரே வியப்பு அவளுக்கு

என்ன சார்! நீங்களா! இங்கேயா? எனக் கேட்டாள்

இங்க தான் உங்க வீடா.. நீங்க சேலம்ன்னு சொன்ன ஞாபகம் எனக்கு….இல்லையா? எனப் பட படத்தாள்

உள்ளே சென்ற இனியன், வெளியில் பேசும் சத்தம் கேட்டுக் குழம்பினான்

யார் கூட இவ பேசிகிட்டு இருக்கா! என யோசித்தான்

வெளியே போனால் பிரச்சனை ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது இனியனுக்கு

மெதுவாக மெயின் டோரை சாத்த முயற்சி செய்தான் அவள் பேசுவதை நிறுத்திய பாடில்லை

ஓ! புரியுது சார். நீங்க வேணும்னு தான் சேலம் உங்க ஊருன்னு சொல்லியிருக்கீங்களா

அந்த சமயம் பார்த்து பக்கத்து வீட்டு ஆண்டி கதவைச் சத்தம் இல்லாமல் திறந்தாள்

தன் கணவரும் ஒரு பெண்ணும் பேசிக் கொள்வதை லைட் போடாமல் இருட்டில் இருந்தவாறு கவனித்தாள். அந்த பெண்ணின் உடையும், அவள் பேசும் விதமும் தெளிவாகச் சொல்லியது அவள் யாராக இருக்கும் என்று

சார் உங்கள மாதிரி இவரும் ஒரு நல்ல கஸ்டமர் என்று அவள் இனியனின் வீட்டை காட்டினாள்

ஆண்டியின் முகத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி ப்ள்ஸ் கேள்விக் குறி

தன் கணவரும் பக்கத்து வீட்டு பையனும் ஒரு விபச்சாரியோட கஸ்டமர் ஆ! அவளுக்கு இருவர் மீதும் இருந்த நம்பிக்கை வெடித்துச் சிதறியது போல் ஒரு உணர்வு 

அவள் செய்யும் தவறையும் தாண்டி கோவம் வந்தது அந்த பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு

விளக்கை போட்டவள், வந்த கோவத்திற்க்கு தன் கணவனை தன் வாய்க்கு வந்த வகையில் திட்ட ஆரம்பித்தாள் கேட்டை கூட திறக்காமல்

நீங்க ஊர் ஊரா சுத்தி வீட்டுக்காக் உழைக்கறீங்க ன்னு பார்த்தா, இப்படி ஊர் மேல போய் உழைக்கிறீங்களா

வீட்டுல இருக்கர கொஞ்ச நேரமும் என்னைப் பற்றி என் தேவையைப் பற்றி கவலை இருக்கா? அதுவும் இல்ல 

அதுவரை கணவன் மனைவிக்குள் இருக்கும் நடக்கும் சண்டையென ஒன்னும் சொல்லாமல் நின்றிருந்தால் அவள்

இனியனும் வெளியே வந்த பாடில்லை. ஒரு சிறு யோசனைக்குப் பின் அவளுக்குப் ஏன் எனப் புரிந்தது

இனியன் வெளியே வந்தால், ஆண்டியின் திட்டு மட்டுமல்ல, அவர்கள் மாட்டிக் கொண்டதினால் ஆண்டியை இனி நேராக பார்க்க முடியாது என்பதினால் தான் என்று.

பக்கத்து வீட்டு ஆண்டி திடீரென்று இவள் மீது பாய்ந்தாள், “ஏன்மா உடம்ப விக்கறெதெல்லாம் ஒரு பொழப்பா என்றாள்”

இப்படி எதுக்கு உயிரோடு இருக்கனும்? என்று அவள் சற்றும் எதிர்பார்க்காதவாறு கேட்டாள்

அந்த நேரம் பார்த்து நிலைமை மோசமானதைக் கண்டு இனியன் வெளியே வந்து கதவைப் பூட்டினான்

பிரெஷர் குக்கர் விசில் அடிப்பது போலக் கத்திய அந்த பக்கத்து வீட்டு பெண்னை இதுவரை பார்க்காமல் இருந்தவள் இப்பொழுது தானாக வந்த வம்பை விடத் தயாராக இல்லை 

நீ சொல்லருது சரி தான்..ஆனா நான் உடம்ப விற்கிறவன்னு சொல்ல தயங்கறது இல்ல

ஆனா நீ உன் வீட்டுக்காரன் ஊருக்குப் போனதும், பக்கத்து வீட்டு ஆளோடு கள்ள உறவு வெச்சிக்கற உன்ன மாதிரி தரம் கெட்டவ நான் இல்ல

இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர், தன் மனைவியும் பக்கத்து வீட்டுக்காரனும் அவர் தலை மறைந்ததும் பண்ணும் லீலைகள் புரிய, அவர் மனைவியை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

அவரும் தன் பங்குக்கு “ஏன்மா பத்தினி தெய்வமே” நீயா இப்போ என்ன பத்தி பேசின என்று கேட்டு வைத்தார்

இனியனின் வீட்டின் வெளியே பூட்டு தொங்க, பக்கத்து வீட்டு கேட்டின் உள்ளே பூட்டு தொங்க

மீதமுள்ள மூன்று பேரின் வாயிலும் பூட்டை மாட்டிவிட்டுப் போனாள் அவள்

மூன்று பேரும் உள்ளேயும் போக முடியாமல் வெளியேவும் போக முடியாமல் நின்று கொண்டிருந்த்தனர்

அந்த நிலையிலும் இனியன் “ஐ” என்று சேமித்து வைத்திருந்த அவள் பெயர் என்னவாக இருக்கும் என யோசித்தான்

மனதுக்குப் பூட்டு போட முடியவில்லை…

“பூட்டு” உலகில் நடக்கும் எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு மௌனமான ஆதாரம்

2 thoughts on “பூட்டு”

  1. ஒரே நேரத்தில் பல மனிதர்கள்! நல்ல சுவாரசியமான களம் & கட்டமைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top