மன்னிப்பு

அனுபமா பரபரப்பாய் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள், 

கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள்

எவ்வளவு நேரம்தான் பேப்பர் படிப்பீங்க, காப்பி டம்பலர கூட கீழ வைக்காம என்னதான் படிப்பீங்களோ

வந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா? ஞாயிற்றுக் கிழமைகூட சப்போர்ட் பண்ண முடியாதா

துருக்கி நாட்டில இருக்கிற நம்ம ஊரு ஆளு ஒருத்தனுக்கு மரண தண்டனை விதிச்சிடாங்களாம், அதிலிருந்து அவனுக்கு மன்னிப்பு கொடுக்கனும்னு நம்ம தரப்பு வக்கீல் எழுதின லெட்டரதான் படிச்சிட்டு இருக்கேன்

பதில் சொன்ன தன் பதியான விக்ரமின் கையில் இருக்கும் பேப்பரை கிழிக்கலாமா என்று கூட யோசித்தாள் அனுபமா

இங்க ஒருத்தி தனியா போராடிக்கிட்டு இருக்கேன்! அது கண்ணுக்கு தெரியல, எங்கேயோ இருக்கிற நாட்டுல ஒருத்தனோட போரட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிராராமாம். தெறிக்கவிட்டாள் அனுபமா.

“மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிப்பு குடுக்கறவன் பெரிய மனுஷன்” சினிமா டயலாக்கை எடுத்து விட்டான் விக்ரம்

இந்த அமளியில் தூங்க முடியாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து வந்தான் ராம். அவர்கள் பெற்ற ஒரே பிள்ளை.

அம்மா, அப்பா சண்டே காலைல சண்டையா. தூங்க முடியல ஒழுங்கா, பொறுப்பே இல்லையா யாருக்கும்

“நீ தூங்கினது போதும், வந்து நீயும் ஹெல்ப் பண்ணு” அம்மா சொன்னாள்

“அப்பா நீங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல. ஏன் இப்படி பண்றீங்க” தன் தலையைக் காக்க அம்மாவுக்கு முழு ஆதரவு தெரிவித்தான் ராம்

“அடப் பாவி, கூச்சமே இல்லாம கட்சி மாறிட்ட” அப்பா சொன்னார்

கட்சியில இருந்தா கூச்சம் இருக்குமா என்ன? அவனுக்குத் தெரிந்த அரசியலை செய்தான் ராம்

“அப்படி யாரு தான் அனு வரப்போராங்க, இப்படி கிடந்து தவிக்கிற சுத்தம் வேற பண்ணற,” விக்ரம் கேட்டான்

“யாரவது வந்தா தான் வீடு சுத்தம் பண்ணனுமா? வீடு சுத்தமா இருந்தா கண்ணு உருத்துதா உங்களுக்கு?

சரி சரி வரேன் வரேன், விக்ரம் பேப்பரை பிரிய மனமில்லாமல் மடித்து வைத்தான்

“ஞாயிற்றுக் கிழமை காலைல இப்படி ஒரு சோதனை, எந்த முட்டாப் பையன் கல்யாணத்த கண்டுபுடிச்சான்?” விக்ரம் முணுமுணுத்தான்

“எதாவது சொன்னீங்களா”? அனுபமா கேட்டாள்

“நான் ரொம்ப குடுத்துவெச்சவன்னு சொன்னேன்”

12 ஆம் வகுப்பு காலாண்டு கடைசி பரிட்சை.

விக்ரம் அவன் நண்பன் சத்தியபிரகாஷுடன் சைக்கிளில் ஸ்கூலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்

சைக்கிளை சத்தியபிரகாஷ் மிதிக்க பின்னே ரோட்டில் போகும் பெண்களை மட்டும் நோட்டம் விட்டுக் கொண்டு வந்தான் விக்ரம்

ஒவ்வொருத்தியும் என்னா அழகு, என்னா நடை, என்னா அதிர்வு..ஹும்…

டேய் சத்யா! கடைல வண்டிய நிறுத்து, புகையிலை விவசாயிகளுக்கு உதவி பண்ணிட்டு போவோம்

பரிட்சைக்கு நேரம் ஆச்சுடா, இப்போ எதுக்கு இதெல்லாம்

டேய் நிறுத்து டா, கிழவன் மாதிரி பேசிக்கிட்டு. இந்த வயசுல பண்ணாம பின்ன எப்போ பண்ணுவ

வண்டி கடையில் நின்றது. “அண்ணே நம்ம ரெகுலர் ஐட்டம் ஒன்னு கொடுங்க” விக்ரம் கேட்டான்

விரல்கள் நடுவே பேனா போல வைத்து சொற்களை ஓட விடாமல் புகையை ஊதி விட்டான்

அறிவுரை சொன்ன சத்யா முகத்திலும் கொஞ்சம் ஊதிவிட்டான்

“ஐயோ! ஏண்டா இப்படிப் பண்ற” சத்யா முகம் சுளித்தான்

என் கூட ஃபிரெண்டா இருந்துகிட்டு எனக்கே வா… வேலை முடிந்தது… வா ஸ்கூலுக்கு போவோம்

ப்ரிட்சை எழுத இரண்டு பேரும் ஒரே க்ளாசுக்கு சென்றனர்

வினாத் தாள் வந்தது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சத்யா “ஆல் த பெஸ்ட்” என்பது போல சைகை செய்துவிட்டு எழுத ஆரம்பித்தான்

விக்ரம் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒன்றும் எழுதவில்லை

சிறிது நேரம் கழித்து அவன் தயார் செய்து வைத்திருந்த பிட் பேப்பரை எடுத்து அதை பார்த்து எழுத ஆரம்பித்தான்.

அவன் செய்வதை சத்யா பார்த்தான், அப்படிப் பண்றது சரியில்லை என்பது போலச் சைகை செய்தான் 

விக்ரம் அவனைக் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

தன்னுடைய வேலை முடிந்ததும் பிட் பேப்பரை கீழே போட்டான். அது மெதுவாகப் பறந்து சத்யா காலடியில் வந்துச் சேர்ந்தது

“டேய் எழுந்திருடா” சத்யா அருகே வந்த ஆசிரியர் சொன்னார்

கீழே விழுந்துகிடந்த பிட் பேப்பரை கையில் எடுத்த ஆசிரியர் “என்னடா பிட் அடிக்கிற, அதுவும் 12ஆம் க்ளாசுல” வா ஹெட்மாஸ்டர் ரூம் போகலாம் என்றார்

சத்யா ஓரக் கண்ணால் விக்ரமை பார்த்தான், விக்ரம் எதுவும் தெரியாதது போல எங்கோ பார்த்தான்

“சார் சார் நான் பண்ணலை சார்” என்றான் சத்யா

“பொய் சொல்லாத, நான் தான பிட்ட கீழ இருந்து எடுத்தேன், வா போலாம் என பேப்பருடன் அவனை அழைத்துச் சென்றார்

சிறிது நேரம் கழித்து சத்யா திரும்ப வந்து பரிட்சையைத் தொடர்ந்தான், கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு நின்றது. எழுத ஆரம்பித்தான் ஒரு ஒரு மணியாய் உருண்டு விழுந்தது கண்ணீர்.

சாயங்காலம் பள்ளி முடிந்தது, சைக்கிள் ஸ்டாண்டில் விக்ரம் காத்துக் கொண்டிருந்தான். 

“என்னடா ஆச்சு ஹெட்மாஸ்டர் ரூம்ல” கேட்டான் விக்ரம்

பதில் ஏதும் வரவில்லை, சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்தான் சத்யா

சொல்லுடா என்ன ஆச்சு? விக்ரம் விடா படியாக கேட்டான்

“உன்னால நான் மாஸ்டர்கிட்ட மாட்டினது உனக்கு முக்கியமா படல இல்ல? சத்யா கோவமாய் கேட்டான்

“நான் என்ன தப்பு பண்ணேன்? அது காத்துல பறந்து வந்து உன்கிட்ட விழுமுன்னு எனக்கு எப்படித் தெரியும்? விக்ரம் தன் நியாயத்தைச் சொன்னான்

“அது அவனது இல்ல சார், நான் தான் வச்சிருந்தேன்னு” சொல்ல உனக்குத் தோணல இல்ல? சத்யா மறு வாதம் வைத்தான்

அமைதி நிலவியது,  இரண்டு பேரும் நடந்தே சென்றார்கள், ஒரு வார்த்தையும் வரவில்லை

சத்யா வீடு வந்தது, அவன் ஏதும் பேசாமல் பிரிந்து சென்றான். விக்ரம் ஒரு நிமிடம் நின்றான், பின் அவனும் அவன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்

காலாண்டுத் தேர்வு முடிந்தது.. விடுமுறை ஆரம்பமானது

கிரிக்கெட் விளையாடுவது விக்ரமுக்குப் பழக்கம், அது ஏனோ சத்யாவுக்கு அதில் நாட்டமில்லை

ஒரு நாள் மாலை விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது கொஞ்சம் வெளிச்சம் கம்மியாக இருந்த ஒரு தெருவின் வழியாகச் சென்று கொண்டிருந்தான் விக்ரம், ஒரு பழைய இடிந்த வீட்டினருகே திடீரென சத்தம் கேட்டது

“வேண்டாம் டா என்ன விட்டுங்க டா, ப்ளீஸ் ப்ளீஸ். வேண்டாம் வேண்டாம்”

அது ஒரு ஆணின் குரல் மாதிரி தான் இருந்தது. நமக்கு என்ன இதில் வம்பு எனக் கேட்டும் கேட்காதது போல நடந்தான் விக்ரம். 

இரண்டு மூன்று அடி எடுத்து வைத்திருப்பான், அவன் மனம் முழுவதும் அந்த குரலில் தான் இருந்தது

“யாராக இருக்கும்? ஒரு வேலை ரௌடிகளோ? இல்லை திருட்டுப்பசங்களா? மண்டை உருண்டு கொண்டிருந்தது, அவன் நடப்பது நின்றது

யாரெனப் பார்க்கும் ஆர்வத்தில் அவனையும் அறியாமல் குரலின் திசையை நோக்கிச் சென்றான்

இருட்டில் முதலில் சரியாகத் தெரியவில்லை, கொஞ்சம் உத்துப் பார்த்தான்….ஐயோ!

சட்டையெல்லாம் கிழிந்த நிலையில் சத்யா. முகத்தில் சிறிது காயமும் கூட இருந்தது. தரையில் முட்டியிட்ட நிலையில் அழுது கொண்டிருந்தான்.

அவனிடம் ஓடிய விக்ரம், சுத்தி நின்ற மூன்று பேரையும் பார்த்து

“டேய் ஓ…..ஓடிப் போயிடுங்க டா…இவன் என்னோட ஃபிரெண்டு. எனக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்று கத்தினான் விக்ரம்

“இதோ பாருடா ஹீரொ வந்துட்டாரு” என்றான் ஒருவன்

“இவனையும் பிரிச்சு பார்த்துடலாமா” என்றான் இன்னொருவன்

“இல்ல இவன் வேற ரகம், இவனை ரெண்டாதான் பிளக்கனும்” என்றான் மூன்றாமவன்

மூன்று பேரும் விக்ரமை அடிக்க ஆரம்பித்தார்கள், அவனும் தடுத்து திரும்ப அடித்தான். கொஞ்சம் கொஞ்சமாக விக்ரமின் பலம் குறைய ஆரம்பித்தது

இப்பொழுது விக்ரம் அடி வாங்க ஆரம்பித்தான், அவனால் தடுக்கக் கூட முடியவில்லை

“அவன விடுங்க டா பொறுக்கி நாய்களா, விடுங்க டா..” சத்யா தடுக்க முயன்றான். அவனை அடித்தார்கள்

திடீரென மூன்று பேரையும் தள்ளிவிட்டு ஓடினான் விக்ரம், சத்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை

மூன்று பேரும் மறுபடியும் சத்யா பக்கம் திரும்பினர், அவனைத் துன்புறுத்தத் தயாராகிச் சிரித்துக் கொண்டே அவனை நெருங்கினார்கள்

அதில் ஒருவன் சொன்னான்” உன் ஃபிரெண்ட் தானா வந்தான் அடி வாங்க முடியாம அவனே ஓடிட்டான் பொட்டை!” என்றான்

சத்யாவுக்கு கோவமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது

அவர்கள் நெருங்கிய சமயம் ஒருவன் அம்மா என்று அலரினான்

பின்னாடியிலிருந்து வந்த விக்ரம் கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் மூன்று பேரையும் கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பித்தான்

அடி பலமாக விழுந்தது, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொருத்தராக ஓட ஆரம்பித்தார்கள்

எல்லோரும் ஓடிய பின் சத்யாவை கை குடுத்துத் தூக்கினான் விக்ரம்

ரத்தம் வழியும் வாயால் சிரித்துக் கொண்டே, “உன்ன அடி வாங்க விட்டுவிட்டு ஓடிடுவேன்னு நினைச்சியா? விக்ரம் கேட்டான்

அந்த சைடுல கிரிக்கெட் பேட்ட வெச்சிட்டு வந்தேன், அதான் எடுத்துட்டு வர ஓடினேன் 

விக்ரமின் கிரிக்கெட் பேட் விரிசல் விட்டிருந்தது. அதை பார்த்து இருவரும் முடியாமல் சிரித்தார்கள். வலி அப்படி வாங்கிய அடி அப்படி

“சரி… ஏண்டா இவங்க கிட்ட அடி வாங்கிக்கிட்டிருந்த? தப்பிச்சு ஓட வேண்டியது தான? விக்ரம் கேட்டான்

சத்யா சிரித்தான், அதுக்கெல்லாம் என்கிட்ட எங்க சக்தி இருக்கு

“என்னடா சொல்ற, எனக்கு புரியல. ஆபத்துன்னு தெரிஞ்ச உடனே தள்ளி விட்டு ஓட வேண்டியது தானே” விக்ரமால் ஒத்துக் கொள்ள முடியவில்லை

“என்ன பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்து இப்படி பண்ணிடாங்க. இல்லைனாலும் நான் எப்படித் தள்ளிவிட்டுட்டு ஓடியிருப்பேன்”, எனக்கு அதுக்கெல்லாம் வக்கு இல்லை

“என்னடா சொல்ற புரியலையே” விக்ரம் சொன்னான்

“இவ்வளவு நாள் என்கூட இருந்தும் என்ன பத்தி தெரியல உனக்கு” சத்யா சிரித்தான். “நாளைக்கு வீட்டுக்கு வா சொல்றேன்”

கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது விக்ரமுக்கு, ஆனால் வலி அதிகமாக இருந்ததனால் அப்புறமாகத் தெரிந்துக் கொள்ளலாம் என வீடு திரும்பினான் விக்ரம்

அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக எழுந்த விக்ரம், பல் விலக்கின கையோடு கிளம்பினான்

“அம்மா நான் கிரிக்கெட் விளையாட போரேன்” என்று சொன்னான்

“நேத்து அவ்வளவு அடி வாங்கிட்டு வந்த அப்புறமும் கிரிக்கெட் விளையாட போகனுமா?” அம்மா கோவமாய் கேட்டாள்

“இந்த விளையாட்டுல அப்படித்தாமா” என்று சொல்லிவிட்டுப் பறந்தான் விக்ரம்

“எப்படியோ போ” அம்மாவின் குரல் தூரத்தில் கேட்டது

மதியம் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்ட பிறகு தான் அவனுக்கு சத்யா பற்றி ஞாபகம் வந்தது

“அம்மா நான் சத்யா வீடு வரைக்கும் போயிட்டு வரேன் மா” என்றான் விக்ரம்

“இப்போ தான வந்த” எனக் கேட்டாள் அம்மா

“ஒரு சின்ன வேலை சீக்கிரமா வந்துடரேன்” எனச் சொல்லிவிட்டு மீண்டும் ஓடினான் விக்ரம்

“சத்யா உன் ஃபிரெண்ட் விக்ரம் வந்திருக்கான் பாரு” சத்யாவின் அம்மா கூப்பிட்டாள்

“உள்ள வா பா, சத்யா அவன் ரூம்ல இருக்கான் பா நீ போ” என்றாள்

சத்யாவை இரண்டு வருடமாகத் தெரிந்தாலும் அவன் ரூமுக்கு போகும் அளவுக்கு விக்ரம் அவனை வீட்டில் சென்று பார்த்து இல்லை. அப்படியே வந்தாலும், ஹாலில் உட்கார்ந்து பேசிவிட்டுச் சென்று விடுவான்

இன்று சத்யாவின் ரூம் கதவை மெல்லத் திறந்தான், உள்ளே ஒரு சேரில் அமர்ந்திருந்தான் சத்யா

“வா டா விக்ரம். காலைலயே வருவேன்னு நினைச்சேன்” சத்யா வரவேற்றான்

விக்ரமுக்கு உள்ளே சென்றதும் ஒரு வித கூச்சமே வந்துவிட்டது, சத்யா ரூம் அவ்வளவு சுத்தமாக இருந்தது

எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, படுக்கையில் தலையனை மீது போர்வை கூட சரியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான் விக்ரம்

“சத்யாவின் அம்மா உள்ளே வந்து என்னப்பா சப்பிடர” என கேட்டாள்

“ஒன்னும் வேணாம் ஆண்டி” என்றான் விக்ரம்

“நான் ஜூஸ் கொண்டு வரேன்” சொல்லிவிட்டுச் சென்றாள்

“எதோ சொல்லறேன்னு சொன்னியே டா” என்ன சொல்லு கேட்ப்போம் விக்ரம் தயாரானான்

“சொல்ல முடியுமான்னு தெரியல, வேணும்னா காட்டலாம், வெயிட் பண்றியா?” கேட்டான் சத்யா

“ம்ம்ம்ம்…அதுக்கென்ன வெயிட் பண்ணலாமே

பொங்கலுக்கு ஓரு நாள் முன்னால் வீட்டை சுத்தம் செய்யவேண்டி அனுபமா பழைய குப்பைகளையும் கிளறிக் கொண்டிருந்தாள். அவள் கல்யாணம் முடித்து வந்த போது அவள் கொண்டு வந்தது விக்ரமுடையது எல்லாம் சேர்ந்து ஒரே பெட்டியில் இருந்தது.

அதில் விக்ரமுடைய பல புத்தகங்களில் ஒரு புத்தகம் நடுவே ஒரு லெட்டர் இருப்பதைக் கவனித்தாள். எடுத்துப் படிக்கலாமா என ஒரு முறை யோசித்தாள், பின்னர் இத்தனை வருடம் ஆன பின்னர் என்ன பெரிய ரகசியம் என மனதில் நினைத்தவாரே கடிதத்தைப் படித்தாள்

அன்புள்ள ஆனந்திக்கு, உன்னை முழுதாக புரிந்து கொண்டதாக நினைத்துதான் ஃபிரண்டா ஏன் அதுக்கும் மேலா உன்கூட பழகினேன். கடைசி வரைக்கும் அப்படிதான் இருக்கும்ன்னு நினைச்சேன் ஆனா நான் சுற்றி இருந்தவங்க குடுத்த தேவையில்லாத, அர்த்தமில்லாத தவறான அட்வைஸ்னால உன்ன ஒதுக்கினேன். இல்ல நான் ஒதுங்கினேன்!

நான் எப்படி இருந்தேனோ அப்படியே புடிச்சுது உனக்கு, ஆனா நீ எப்படியோ அப்படியே ஏத்துக்கிட்டு என்னால தொடர முடியல. என்ன மன்னிச்சிடு. மன்னிப்பு கேட்க எனக்கு தகுதியிருக்கான்னு கூட தெரியல…

லெட்டர் பாதியிலே நின்றது போல இருந்தது

அனுபமா அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தாள். கல்யாணத்துக்கு முன்னால் நடந்த விஷயமாக அவளுக்குத் தோன்றியது…மனதில் ஒரு சிறு சலனம் 

பாத் ரூமிற்க்குள் போன சத்யா திரும்பி வெளியே வந்தான் “விக்ரம் இப்போ என்ன பாரு”.

வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம், தன் தலையைத் திருப்பி சத்யாவைப் பார்த்த சில வினாடிகளுக்கு அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட புரியாத நிலை

சத்யா ஒரு அழகான பிங்க் சல்வார் கமீசில் பின் பண்ணிய துப்பட்டாவுடன் மின்ணினான். கண்ணில் கொஞ்சம் மை, தூக்கி வாரிய முடி. கையில் இரண்டு வளை, நடு நெத்தியில் சிறிய பொட்டு. நிற்கும் போது இடுப்பில் ஒரு சின்ன சரிவு.. இதான் நான் என்றான் கொஞ்சம் குழைந்த குரலில்

விக்ரமுக்கு என்ன செய்வது என புரியாவிட்டாலும், பளீரென சிரித்துவிட்டான் என்னடா சத்யா என்று அவனிடம் ஓடிப்போய் கையை பிடித்து இழுத்து கட்டிப்பிட்த்தான்

“என்ன விளையாட்டு இது” என்று சொல்லிக் கொண்டே சிரிது பிடியை தளர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டான் “நீ என்ன கிண்டல் பண்ணதான இப்படிப் பண்ணற” என்று சொல்லிக் கொண்டே சத்யாவை அழுத்தி கட்டிப்பிடித்தான்

அவன் கையில் ஒரு சத்யா உடுத்தியிருந்த உடுப்பு தட்டுப்பட்டது, “இது கூடவா போட்டிருக்க? அவ்வளவு தத்ரூபமா பெர்ஃபாம் பண்ற..அப்படினா என்று அவனுடைய பேண்டை காண்பித்து உள்ளே என்ன போட்டிருக்க? என்பது போல பார்த்தான்

பூ..ப்ப் பூ போட்ட போட்ட ஜட்…. என்னடா நிஜமா இதெல்லாம்

அந்த சமயம் பார்த்து சத்யாவின் அம்மா உள்ளே வந்தாள். வெடுக்கென்று விக்ரம் விலகிக் கொண்டான்

“நானும் முதல்ல புரிஞ்சுக்கல, அப்புறமா சமாதானம் ஆயிட்டேன்” “அவன் என்ன வேணும்னா பண்ணபோறான்” “அவங்க அப்பாதான் கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாரு”

“சத்யா உன்கிட்ட தான் இந்த விஷயத்த முதல்ல சொல்லனும்னு சொன்னான். நீ அவன சரியா புரிஞ்சுப்பன்னு அவனுக்கு நிறைய நம்பிக்கை” சத்யாவின் அம்மா மொத்தமாக முடித்தாள்.

“உன் பெயரை விக்ரம் தம்பிக்கிட்ட சொல்லிட்டியா? சத்யாவின் அம்மா கேட்டாள்

பெயரா! விக்ரம் குழம்பினான். எனக்கு தான் சத்யாங்கற சத்தியபிரகாஷ தெரியுமே!

“ஆனந்தி”. இனிமேல் அதுதான் என் பெயர் சத்யா சிரித்தான், வெட்கப்பட்டார் போலவும் இருந்தது

விக்ரமுக்கு இப்பொழுது எல்லாம் விளங்கியது, சத்யா ஏன் அவன் மீது கோவம் கொண்டு நட்பை விடவில்லை, மூன்று பேரிடம் அடி வாங்காமல் ஓடவும் இல்லை தடுக்கவும் இல்லையென.

“நான் எப்பவுமே உன் ஃபிரெண்ட் தான் டா சத்யா, சாரி ஆனந்தி” இருவரும் உண்மையான நட்ப்பைப் பரிமாறினர்

ஒரு வழியாகச் சுத்தம் செய்யற வேலை முடிந்தது, ஹால் வரைக்குமாவது சரியானது

“என்னங்க கொஞ்சம் கடைக்குப் போய் ஸ்வீட்ஸ், பூ அப்புறமா காய்கறி லிஸ்ட் தரேன் வாங்கிட்டு வாங்க” அனுபமா பணிவாய் கேட்டாள்

“இவளோட கூட படிச்ச ஃப்ரெண்ட் யாரோ வீட்டுக்கு வராங்க போலிருக்கு அதான் இந்த ஏற்பாடெல்லாம்…ம்ம்ம்ம்…” என்று சொல்லிக் கொண்டே விக்ரம் மஞ்சப் பையைக் கையில் எடுத்தான்

மணி 11.30, அனுபமா சமைத்துக் கொண்டிருந்தாள். விக்ரம் குளித்துவிட்டு வந்தான். ஃபேனை போட்டுவிட்டு அமர்ந்தான்

சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து வாசலில் நின்றது, கதவைத் திறந்துகொண்டு புடவையில் ஒரு பெண் கீழே இறங்கினாள். எனக்கு அனுவ பத்தி தெரியாதா என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்

சமையல் கட்டிலிருந்து வாசலலுக்கு ஓடிப் போனால் அனுபமா

“உள்ள வாங்க, உள்ள வாங்க என்ன தயக்கம்” என வரவேற்றாள்

“இவர் தான் என் கணவர் விக்ரம்” என அறிமுகம் செய்தாள் அனுபமா. “என்னங்க இவங்க ஆனந்தி”

“அப்பொழுது தான் தலையை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்”

உட்கார்ந்திருந்தவனால் எழ முடியவில்லை, வாய் குழறியது, கண் துடித்தது, கை நடுங்கியது சிரமப்பட்டு எழுந்து போய் கண்மூடி அணைத்துக் கொண்டு அழுதான் விக்ரம்

“ஆனந்தி என்ன மன்னிச்சுடு, நான் வேணும்னு பண்ணல. ப்ளீஸ் என்ன மண்ணிச்சிடு” கெஞ்சினான் விக்ரம்

“இல்லேனா உன்ன பார்க்க இங்க வருவேனா” முழுவதுமாய் ஆனந்தியான ஆனந்தி கேட்டாள்

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க, நான் காஃபி கொண்டு வரேன்” சென்றாள் அனுபமா

முழுவதாக இரண்டு மணி நேரமானது அவர்கள் பேசி முடிக்க. ஒரு நிமிஷம் இரு ஆனந்தி என சொல்லிவிட்டு உள்ளே சென்ற விக்ரம் அனுபமாவைக் கட்டிப்பிடித்து சத்தமாய் ஒரு முத்தமிட்டான்.

“விடுங்க…விடுங்க… என்ன” என்று செல்லமாய் கோபித்தாள் அனுபமா

“ஆனந்திய எப்படி உனக்கு தெரியும்? எப்படிக் கண்டுபிடிச்ச? விக்ரம் கேட்டான்

“அது ஒரு தனிக் கதை. வேணும்னா கதாசிரியர இன்னொரு கதை எழுத சொல்லட்டுமா?

விக்ரம் சிரித்துக் கொண்டே ஹாலுக்குச் சென்றான்

“அப்போ நீ சரிதாவ கல்யாணம் பண்ணலையா?” ஆனந்தி கேட்டாள்

“இல்லை அவன் உன்ன பத்தி என்ன நம்ப வெச்சதும் தப்பு, அவள பத்தி என்ன நம்ப வெச்சதும் தப்பு” இருவரும் சரிதான் என்பது போல் மண்டையை ஆட்டினார்கள்

அனுபமா வெளியே வந்து என்ன ரகசியம் எனக் கண் சிமிட்டினாள்

“உங்கள கல்யாணம் பண்ண விக்ரம் எத வேணும்னாலும் இழக்கலாம்ன்னு சொல்லிட்டிருந்தேன்” மூன்று பேரும் சிரித்தனர்

மாலை 4.30 ஆனது கடைசியாக ஆனந்தி கிளம்ப முற்பட்டாள்

“அப்போ நான் கிளம்பரேன், என் வீட்டுக்கு வாங்க எல்லோரும் ஒரு நாள்” என்றாள் ஆனந்தி

விக்ரமும் அனுபமாவும் நிச்சயமாக என்பது போலத் தலையாட்டினார்கள்

வாசலருகே சென்ற ஆனந்தியிடம் அனுபமா கேட்டாள்

“ இவ்வளவு அழகான புடவை, அதை கோயில் சிலை மாதிரி எப்படிக் கட்டுறீங்க?” அனுபமா கேட்டாள்

“நம்ம ரெண்டு பேரும் ஒன்னா அடுத்த வாரம் ஷாப்பிங் போகலாம் அப்புறமா புடவை டிரேப்பிங்கும் சொல்லித் தறேன், இவன மட்டும் கூட்டிட்டு வராதீங்க” என விக்ரமை பார்த்து சொல்லிவிட்டு கண்ணடித்தாள் ஆனந்தி

மன்னிப்பு! கிடைத்தது

Scroll to Top