மணல்
மாலை மணி 5.30 இருக்கும்..
ராயப்பேட்டை பைக்கிராப்ட்ஸ் ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சிறு சந்தின் வழியே நாம் செல்லக் கூடவே குட்டி சாக்கடை கால்வாயும் நம்முடன் துணைக்கு வருகிறது.
அந்த கால்வாயுடன் கடைசி வரை நாம் தொடர்ந்து பயணிக்காமல் நடு வழியில் விடை பெற்றுக்கொள்ளலாம்,
நாம் செல்ல வேண்டிய வீடு வந்து விட்டது. ஒரு சிறிய நுழைவாயில். அதன் வழியே செல்ல அங்கே வரிசையாக அமைந்திருக்கும் மூன்று வீடுகளில் இரண்டாவது வீடு சந்துருவுடையது
இப்பொழுது பூட்டிய கதவு மட்டுமே தரிசனம் தந்தது.
மெரினா பீச், பீச் மணல் பல பல கனவுகளும், வயிறுகளும் நிறைவு பெறும் இடம். பல பல காதல்கள் உடைந்த இடம், விரும்பிய பெண்ணின் மனதை அடைந்த இடம். எதையோ துலைத்துவிட்டு தேடுபவர்களின் இடம். தன்னையே துலைத்துவிட கடலை நோக்கி ஓடுபவர்களின் இடம். சொல்லிக் கொண்டே போகலாம், கடற்கரை போலவே நீண்டு விடும் லிஸ்ட்.
கூட்டம் கூட்டமாய் மக்களை எதிர் பார்த்திருக்கும் கடைகளின் நடுவே, மாரி அண்ணனுடைய பஜ்ஜி கடையும் ஒன்று.
அடுப்பில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருந்தது. கடல் காற்றின் 24/7 சர்வீஸிலிருந்து அடுப்பின் நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது ஒரு பெரிய தகர ஷீட். மண்ணென்னை பம்பு ஸ்டவ் காலமெல்லாம் முடிந்துவிட கேஸ் ஸ்டவ்வின் மீது சட்டி உட்கார்ந்திருந்தது. ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசமாக வழங்கிய கேஸ் ஸ்டவ்
கடலை மாவில் உப்பு சேர்த்து கொஞ்சம் மிளகாய்ப் பொடி, தண்ணீர் ஊற்றி கையால் கலந்து கொண்டிருந்தார் மாரி அண்ணன். 20 வருஷ சர்வீஸ். வயது 55 இருக்கும். ஒரு டீ சர்ட், மடித்துக் கட்டிய கைலி தோளில் துண்டு. கடையின் அனைத்து பக்கமும் கல்யாணத் தோரணம் போல பஜ்ஜி மிளகாய். இருபுறம் கியூ. ஆர். கோடு அட்டை எல்லாம் ரெடி. கரண்டி பிடித்த கை, பஜ்ஜி மடித்து குடுத்த கை இப்பொழுது பணப் பெட்டியில் கை வைப்பது குறைந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம்.
மாரி சூடு எரிய எண்ணெய்யில், பழங்கால படங்களில் வரும் முனிவர்கள் சாபம் விடுவது போலத் தண்ணீரை எண்ணெயில் தெளித்தார், அது சிலிர்த்தது, வெடித்தது.
பஜ்ஜி தயாராகிக் கொண்டிருந்தது. கடைக்கு ஆட்களும் வரத் தொடங்கினார்கள்
சந்துரு தன் 9 வயது மகன் ஹரியுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். மாரி அண்ணன் கடையிலிருந்து சிறிது தூரத்தில் தான் அவர்கள் உட்காருவது வழக்கம்
மாரி அண்ணன் கடையைக் கடந்து செல்லும் பொழுது இருவரும் ஒரு வணக்கம் வைத்தார்கள். மாரி அண்ணன் மற்றவர்களைப் போல உம்மென்று இல்லாமல் ஒரு உண்மையான சிரிப்புடன் கை அசைத்தார்.
சந்துருவும் ஹரியும் அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தில் போய் உட்கார்ந்தார்கள்.
கடற்கரைக்கு வரும் பல வகை விந்தை மனிதர்களில் ஒரு முக்கியமான வகை, தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அமைதியாக நோட்டமிடும் ஒரு வகை. அமல் சார் அந்த வகை. வயது 60க்கு மேலிருக்கும்
வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறக்கவோ இல்லை மறைக்கவோ எனத் தெரியவில்லை, தினமும் சாயங்காலம் வருவார். எல்லா நாட்களும் வருவார் எனச் சொல்ல முடியாது, ஆனால் வாரத்தில் பல நாட்கள் வரும் வாடிக்கையுண்டு அவருக்கு
மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை, திருமணமான மகளோ பல சண்டை சச்சரவுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று கவலை. இரண்டும் அவருக்குக் கவலை தான். மனிதனால் நிதர்சனத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. சமுதாயம் வாய்க்கு வந்ததைப் பேசும் நம் பிரச்சனையில் என்ன பங்கு போட வா போகிறது? இருந்தாலும் கவலை
மாரி அண்ணன் கடைக்கு வந்தார் அமல், “ரெண்டு பஜ்ஜி கொடுப்பா” என்றார்
மாரி உடனே நான்கு நான்காய் கிழித்து வைத்திருந்த தினத்தந்தி பேப்பர் குவியலிலிருந்து ஒரு தாளை எடுத்து இரண்டு மிளகாய் பஜ்ஜியை மடித்துக் கொடுத்தார்
“என்ன ரெண்டு மிளகாய் பஜ்ஜியா, சாப்பிட்டா நான் என்னத்துக்கு ஆகிறது, வயிறு எரியும்” என்றார் அமல்
“யார பார்த்து சார் வயிறு எரியும் உங்களுக்கு?” எண்ணெய்ச் சட்டியில் கரண்டியால் மீன் பிடித்துக் கொண்டிருந்த மாரி கேட்டார்.
“ஏன் பா உனக்கு என் மேல என்ன கடுப்பு? பஜ்ஜிய விட்டுட்டு என்ன வறுத்து எடுக்கர?” “வாழைக்காய் பஜ்ஜிய கொடு” என்றார் அமல்
“கோவப் படாதீங்க சார், கூட்டம் கம்மியா இருக்கும் போதுதான் இப்படி கொஞ்சம் ஜாலியா பேச முடியும்” மாரி கனிவாய் சொன்னார்
“உன்ன நம்பி நான் வரேன், நீ என்னடானா என்ன நெம்பி எடுத்து குஷி படற” “நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல” சொன்னார் அமல். வாய் மட்டும் தான் அப்படிச் சொன்னது முகத்தில் கொஞ்சம் அலுப்பு தெரிந்தது.
“சரி நான் அப்படிப் போய் கொஞ்சம் உட்காருரேன், நீ தொழில கவனி” கையில் பஜ்ஜியுடன் சிறிது தள்ளிச் சென்று அமர்ந்தார் அமல்.
“சூடா பஜ்ஜி, மிளகா, ஆனியன், பிரெட் பஜ்ஜி” மாரியின் குரல் பின்னால் கேட்டுக் கொண்டிருந்தது, அமல் ஒரு மணல் திட்டு அருகே சென்று அமர்ந்தார்
கடலை நோக்கி அமர்ந்திருந்தார் அமல். தனக்கு முன்னால் இடது பக்கம் மாரியின் பஜ்ஜிக்கடை. அவருக்கு முன் சற்று தொலைவில் காதல் ஜோடிப் பறவைகள் வந்து அமர்ந்தன.
இதுங்க என்னலாம் பண்ணப் போகுதோ, நிம்மதியா பஜ்ஜி சாப்பிட முடியாது போலிருக்கே. மனதில் நினைத்தவாறே சிறிது வலப் பக்கமாகத் திரும்பிக் கொண்டார்
அங்கே சந்துருவும் ஹரியும் உட்கார்ந்திருந்தார்கள், அவர்கள் பேசுவது காதில் விழ வாய்ப்பில்லை(ராஜா) ஆனால் அவர்களின் முக பாவனைகள் தெளிவாகத் தெரிந்தது.
அப்பாவும் பிள்ளையும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அமலுக்கு அவர்கள் இருவரும் இவ்வளவு நாளாக ஒரு காட்சிப் பொருளாய் தெரிந்தார்களே தவிர அவர்களை உற்றுக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை அவருக்கு
இன்று ஏதோ அந்த ஜோடிகள் வந்தமர்ந்த நேரம், தன் பார்வையை சந்துரு மற்றும் ஹரியின் பக்கம் திருப்ப வேண்டியதாய் போனது அமலுக்கு. அமைதியாய் மற்றவர்களைக் கவனிக்கும் நேரம் ஆரம்பமானது அமலுக்கு.
“அப்பா இனிமேல் பஜ்ஜி வேண்டாம் பா, நான் சாப்பிட போறதில்லை”
“ஏண்டா கண்ணா, உனக்கு ரொம்ப பிடிக்குமே திடீர்ன்னு இப்படி நல்ல பையன் ஆயிட்ட”
“நான் சுண்டல் சாப்பிடலாம்னு இருக்கேன், அதான் அப்படிச் சொன்னேன்”
“அதான பார்த்தேன், நீயாவது இங்க வந்துட்டு சாப்பிடாம போரதாவது” அவன் விஷமத்தை வியந்து முகம் காண்பித்தார் சந்துரு
“ஸ்கூல்ல என்னடா இன்னைக்கு சுவாரசியம்?” சந்துரு கேட்டார்
“அதே கதை தான் பா, எங்கள படிக்க வைக்க வாத்தியாருங்க முயற்சி பண்றதும், நாங்களும் படிக்கர மாதிரி நடிக்கறதும், ஒரே தமாசு” தங்கு தடையில்லாமல் சொன்னான் ஹரி.
“டேய் என்னடா பண்ண ஸ்கூல்ல அத சொல்லுடான்னா” சந்துரு எரிச்சலானது போல பாவலா செய்தார்
“அம்மா என்கிற தலைப்பில் பேச சொன்னாங்க அப்பா”
“நீ பேசினியா?”
“ இல்லையா பின்ன! அம்மாவ எனக்கு எவ்வளவு பிடிக்கும், எனக்கு எண்ணலாம் பண்ணுவாங்க, நான் அவங்க கூட எவ்வளவு சண்டை போடுவேன், எல்லாம் பேசினேன் பா” ஹரி உற்சாகமாகச் சொன்னான்
“அப்புறம் என்ன ஆச்சு?” சந்துரு கேட்க.
“இந்த வருஷம் ஆன்வல் டே ஃபங்ஷன்ல அதையே கொஞ்சம் விரிவா பேச சொன்னாங்க அப்பா”
“வெரி குட், இன்னும் நல்லா தயார் பண்ணிப் பேசு” சந்துருவின் பெருமை முகத்தில் தெரிந்தது
“அம்மா கூட எப்போ பார்த்தாலும் ரகளை பண்ணிக்கிட்டு இருக்க, ஆனா அவங்கள பத்தி பேசி நல்ல பெயர் வாங்கிட்ட ஸ்கூல்ல”
“அது வேற வாய் பா, வீட்டுல நான் வேற BOY பா” ஹரி அடுக்குமொழி பேசினான்
“அம்மா இன்னிக்கும் லேட்டா வருவாங்களா அப்பா?” ஹரி கேட்டான்
“அப்படித்தான் நினைக்கிறேன், நீ ஹோம்வொர்க் பண்ணிட்டு சாப்பிட்டுத் தூங்கு”
“இந்த வருஷம் ஆனுவல் லீவுக்கு எங்கப்பா போலாம்”?
“அம்மா பாட்டி ஊருக்குத்தான், ஏன் கேட்கற?”
“இல்ல வேற எங்கயாவது போக நீங்க ப்ளான் பண்றீங்களோன்னு யோசிச்சேன்”
தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அமலுக்கு அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்களோ என்று கேட்க ஒரு சிறு ஆசை தோன்றியது
அதற்குக் காரணம் ஒரு பிள்ளையும் தகப்பனும் கவலையின்றி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நமக்கும் அப்படி ஒரு நிலைமை வராதா என்று ஒரு ஆசை அமலுக்கு
தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து உத்தியோகம் அனுப்பி, கல்யாணம் செய்து வைத்த பிறகும் அமைதி இல்லை, அதைத் தேடித்தான் இங்கு வந்து அமர்ந்திருக்கின்றோம் என்ற எண்ணம் எப்பொழுதும் அவருக்கு உண்டு
அரை மணி நேரம் ஆகியிருக்கும்.
ஹரியும் சந்துருவும் கிளம்பினார்கள். அதை கவனித்த அமல் தன்னையே அறியாமல் எழுந்து நின்றார்.
அன்றைக்கு என்னவோ கடற்கரை நேரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் என்று தோன்றியது அமலுக்கு
“என்ன சார் இன்னைக்கு சீக்கிரமா கிளம்பிட்டீங்க?” மாரியின் குரல் கேட்ட பின்புதான் அமலின் தன்னிலை மறந்த யோக நிலை முடிவுக்கு வந்தது
“ஆமாம் மாரி, இன்னைக்கு என்னவோ போதும்ன்னு தோனுது” எவ்வளவு ஆச்சு?”
“நூறு ரூபாய் தான் சார், சில்லறையா இருந்தா குடுங்க”
“என்னது ரெண்டு பஜ்ஜிக்கு நூறு ரூபாய் ஆ!”
“ஆமா சார் போன வாரம் நம்ம இருக்கிற இந்த பீச்ச வாங்கிட்டேன், இங்க நிற்க, உட்கார பணம் வசூலிக்கலாம்ன்னு அரசு ஆணை இருக்கு சார்” “அத சேர்த்து தான் நூறு ரூபாய்ன்னு சொன்னேன்”
“ஏன் மாரி இன்னைக்கு நான் தான் கிடைச்சேனா உனக்கு, இந்தா இருபது ரூபாய்”
“அதான் தெரியுதுல சார், தினமும் தான சாப்பிடுரீங்க, அப்புறம் என்ன எவ்வளவு ஆச்சுன்னு ஒரு கேள்வி?”
“ஏதோ நியாபகத்துல கேட்டுட்டேன், நாளைக்கு வேற பக்கம் போய் உட்கார்ந்துக்குறேன்”
“சார், சார், என்ன இப்படி தடால்ன்னு சொல்லிட்டீங்க, சரி நீங்க தான் ஜெயிச்சீங்க. என்ன பழி வாங்கிடாதீங்க” “நாளைக்கு பாப்போம்” மாரி பவ்யமாய் சொன்னார்
தன் சோகமான வாழ்க்கையிலும் ஒரு சிறு சிரிப்பைப் பதிவு செய்துவிட்டு சென்றார் அமல். மாரியும் புன்னகைத்தார்
தன் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அமல் நடந்ததை நினைத்துக் கொண்டே போனார். இது போன்ற சிறு தருணங்களுக்காகத் தான் அவர் கடற்கரை வரை தினமும் வருகிறோம் என்றும் அது அவருடைய பிரச்சினைகளிலிருந்து கொஞ்ச நேரம் விடுதலை தருகிறது என்பதிலும் ஒரு சிறு நம்பிக்கை உண்டு அவருக்கு
வீட்டுக்குள்ளே செல்லும் போது கடற்கரையில் பார்த்த அப்பா பிள்ளை இருவரும் வீடு சென்றிருப்பார்களா என்று கடைசியாக யோசித்தார் அமல்
மணி இரவு 8.00 ஆனது வேலைக்குப் போன மகன் வீட்டுக்கு வந்தான்.
உள்ளே வரும் போதே ஷீ ஒரு பக்கம் பறந்தது. ஆபிஸ் பேக் இன்னொரு பக்கம் பறந்தது. நல்ல வேளை உள்ளே லாப்டாப் இல்லை
“என்னடா ஆச்சு? ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா, இவ்வளவு கோவமா வர
“அப்பா உனக்காகவும் அக்காகவும் தான் பார்க்கிறேன் இல்லைனா அவ விதவையான கூட பரவாலன்னு அந்தாள கொன்னுட்டு உள்ள போயிருவேன்”
“என்னடா ஆச்சு மாப்பிள்ளை எதாவது பிரச்சனை பண்ணிட்டாறா?
“மாப்பிள்ளை, இந்த கருமத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை” “மனுசனா அவன்”
“காலைலேர்ந்து எத்தனை கால், எத்தனை மெசெஜ் கிரடிட் கார்டு டீடைல்ஸ் கொடுன்னு”
“அந்த ஆளுக்கு புது ஃபோன் வேணும்னா தன் பைசால வாங்க வேண்டியது தானே, என் பணத்த ஏன் கேக்கிறான்?’
“நான் கால்செல்லாம் அட்டண்ட் பண்ணவே இல்ல, மதியம் மேல ஆபிஸ்ல வந்து நிற்கறான், எனக்கு அசிங்கமா போச்சு. என் கலீக்ஸ் நடுவுல நான் பணம் தர முடியாதுன்னு எப்படி நான் சண்டை போடுவேன் சொல்லுங்க”
“சரி விடுடா, நம்ம தலை எழுத்து. இப்படி ஒருத்தன் கிட்ட அக்கா மாட்டிருக்கா” அமல் சமாதானம் செய்ய பார்த்தார்
இருவரும் சாப்பாடு கூட சாப்பிடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்
பின்னர் அமல் இருவருக்கும் சாப்பாடு கொண்டு வந்தார், “வா டா சாப்பிடலாம்”
இரண்டு வாய் தான் சாப்பிட்டிருப்பார்கள்..
“ஏன் டா அந்த பொண்ணு வீட்டுக்காரங்க வரேன்னு சொன்னாங்க, நீ என்ன சொல்லற” அமல் கேட்டார்
சாப்பிடாமலேயே தட்டை சமையலறையில் போட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றான்
அமல் அவர் செய்த முட்டாள் தனத்தை நினைத்து நொந்து கொண்டார். அன்று இரவு சாப்பாடு இருந்தும் பட்டினி
சில நாட்கள் ஓடின, அமல் தினமும் அந்த அப்பா பிள்ளை வருகிறார்களா என கவனிப்பார், அவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்து பூரித்து போவார்.
தன் வீட்டிலும் இப்படி ஒரு அமைதியான சந்தோஷமான நிலைமை வராதா என வருத்தம் கொள்வார்
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆசை நாளுக்கு நாள் அதிகமானது
ஓரு நாள் அவர்கள் இருவரும் வரும் வரை காத்திருந்தார் அமல், அவர் வழக்கமாய் உட்காரும் இடத்தில் சென்று அமரவில்லை
சிறிது நேரத்தில் ஹரியும் சந்துருவும் கடற்கரை வந்து சேர்ந்தார்கள்
அவர்கள் மாரி அண்ணன் கடையில் பஜ்ஜி வாங்கிக்கொண்டு ஒரு பக்கமாய் போய் அமர்ந்தார்கள்
அமல் மெல்லமாக ஏதோ நினைப்பில் இருப்பது போன்று அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் உட்கார்ந்தார். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கேட்கும் என்று ஒரு நம்பிக்கை
“ஹரி, ஸ்கூல் ஆன்வல் டே ஃபங்ஷன் என்னிக்கு? நீ பேச வேண்டியத மனப்பாடமா சொல்லி பார்த்துட்டியா?
“அடுத்த வாரம் சனிக்கிழமை பா. எல்லாம் ரெடி அப்பா. நீங்க நிச்சயம் வருவீங்க இல்லியா?
“நான் வராம இருப்பேனா! அதுவும் உங்கம்மா பத்திப் பேச போகிற, நிச்சயம் வருவேன்” சந்துரு ஆர்வமாய் பதில் சொன்னார்
அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கேட்பது நினைத்து அமல் மெலிதாய் சிரித்துக் கொண்டார்
“அம்மா தினமும் ஆஃபிஸ்லேந்து லேட்டா வராங்க அப்பா, என்னால அவங்க கூட விளையாடவே முடியறது இல்ல” ஹரி கவலை பட்டுக் கொண்டான்
“அம்மா சீக்கிரம் வந்தா மட்டும் என்ன, அவங்களோட சும்மா சண்டை தான் பிடிக்கற” சந்துரு சொன்னார்
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லியே, கொஞ்சமா வம்புக்கு இழுப்பேன் அவ்வளவு தான்” ஹரி குறுகுறுவென சிரித்தான்
“கொஞ்சமாவா, ஒரு தடவ அம்மா ஃபோன்ல சார்ஜ் போடுன்னு சொல்றதுக்குப் பதிலா மறந்து சார்ஜ்ல ஃபோன போடுன்னு சொல்லிட்டாங்க, அதுக்கு நீ என்ன கேட்ட
“இங்க இருந்து ஃபோன தூக்கி சார்ஜ்ல போட்ட உடையும் பரவாயில்லியான்னு கேட்கற! அம்மா கடுப்பாயிட்டாங்க” சந்துரு சிரித்துக் கொண்டே சொன்னார்
“ஆமாம் இதுக் கூட பண்ணலனா எப்படி? ஹரி ஒரு திருட்டு சிரிப்பு சிரித்தான்
ஆமலும் அவர்கள் இருவரைப் போல மெலிதாய் சிரித்துக் கொண்டார்
இது கூட பரவாயில்லை, “எக்ஸாம்ல எவ்வளவு மார்க் எடுத்தன்னு கேட்டதுக்கு, நூறுக்கு மேலன்னு சொல்லியிருக்க, எங்க காமி பாப்போம்ன்னு அம்மா கேட்டதுக்கு.
பாருங்க நூறுக்கு மேல தான் என்னோட மார்க் இருக்குன்னு காமிக்கற!”
“நான் பொய் எதுவும் சொல்லலியே” ஹரி விஷமமாய் சிரித்தான்
அமல் அவர்கள் சிரிப்பதற்கு முன்னாலேயே பட்டென்று சிரித்துவிட்டார்
அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் விதமும், அம்மா மீதுள்ள அன்பும், விலை மதிப்பில்லாத சந்தோஷமும் அமலை கொஞ்சம் பொறாமை கொள்ளச் செய்தது
அவர்கள் இருவரையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அமலுக்கு, இருவரும் எழுந்து சென்றது கூடத் தெரியவில்லை
பின்பு அமலும் எழுந்தார், வேட்டியிலிருந்த மணலை தட்டிவிட்டு மாரியிடம் கை காண்பித்து விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்
வீடு வந்தது கூடத் தெரியவில்லை முழு நேரமும் அந்த குடும்பத்தின் சந்தோஷம் போல தன் குடும்பத்தில் இல்லையே என்ற ஒரு வருத்தம் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது.
வீட்டின் வாசலில் தன் மகள் காத்துக் கொண்டிருந்தாள்.
“என்னமா வந்து ரொம்ப நேரமாச்சா?” அமல் ஆர்வமாய் விசாரித்தார் “பீச்சு வரை போயிருந்தேன்
“மாப்பிள்ளை வரல? நீ மட்டும் தனியா வந்திருக்க?” அமல் கவலையாய் விசாரித்தார்
“இனிமேல் நானும் அங்க போகல அந்த ஆளும் இங்க வரமாட்டாரு” மகள் சிறிதும் கவலையின்றிச் சொன்னாள்
“என்னமா சொல்லற, என்ன ஆச்சு?” அமல் பதறினார்
“தம்பி ஃபோன் வாங்க பணம் குடுக்கல இல்லியா, அதான் ஒரே சண்டை. நீயும் வேணாம் உன் வாழ்க்கையும் வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். தம்பியும் எனக்காக எவ்வளவு தான் இறங்கிப் போவான்?”
“அப்பா கவலை படாதீங்க, என்ன தான் படிக்க வெச்சிருக்கீங்க ல. நான் இங்க உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன். ஒரு வேலையப் பாத்துக்கிட்டு போயிடுவேன்”
அமல் அழுவதா இல்லை பெருமை படுவதா எனத் தெரியவில்லை. தன் வீட்டில் மட்டும் ஏன் இந்த சோகமெனும் சூறாவளி வீச வேண்டுமென நொந்து கொண்டார்
அடுத்த நாள் அமலுக்கு 101 டிகிரி ஜுரம் ஆரம்பமானது. எழ கூட முடியவில்லை. மூன்று நாட்களாய் படுக்கை தான். மகள் தான் அவரை பார்த்துக் கொண்டாள்
அமல் மனம் பூராவும் கடற்கரையில் தான் இருந்தது, அங்கே என்ன நடக்கிறதோ என்ற ஆர்வம். அந்த இருவரின் சிரித்த முகமும் சந்தோஷமும் அவரின் ஜுரத்தைப் போக்கும் மருந்தாய் இருந்தது. இன்று எப்படியாவது கடற்கரைக்குப் போய் விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
சாயங்காலம் அவருடைய மகளிடம், “நான் கடற்கரை வரைக்கும் வாக்கிங் போலாம்ன்னு இருக்கேன் மா” என்றார் அமல்
“என்னப்பா பைத்தியமா உங்களுக்கு, இன்னிக்கு தான் ஜுரம் குறைஞ்சு இருக்கு எழுந்து உட்காரவே முடியுமான்னு இருக்கீங்க, பீச்சுக்குப் போக போரேன்னு சொல்ரீங்க” அவள் எரிச்சலாய் சொன்னாள்
அமல் கடந்த சில வாரங்களாக நடப்பதை அவளிடம் சொன்னார்
“நீங்க என்ன சொன்னாலும் உடம்பு சரியான அப்புறமா போகலாம், ரெஸ்ட் எடுங்க”என்றாள்
ஆமலின் ஆர்வமும் ஆசையும் காத்திருக்க வேண்டியதாய் போனது.
இரண்டு நாள் கழிந்தது அமல் குணமடைந்து கடற்கரைக்கு ஆர்வமாய்ச் சென்றார். மாரி அண்ணன் கடையை அடைந்தார். “என்ன மாரி எப்படி இருக்க?”
“அத நான் கேட்கனும் சார், என்ன ஆச்சு உங்களுக்கு ஒரு வாரம் ஆச்சு உங்கள பார்த்து!”
“லேசா ஜுரம் பா, அத விடு அந்த பையனும் அப்பாவும் வராங்களா?”
“என்ன சார் வந்ததும் வராததுமா அவங்கள பத்தி கேக்கறீங்க, அவங்கள நான் கவனிச்சா யாரு என் தொழில பார்க்கிறது” மாரி சலிப்பாய் கேட்டார்
“இல்லப்பா என்ன மாதிரி அவங்களையும் உனக்கு தெரியும்ல, அதான் கேட்டேன்”
“தோ பாருங்க நீங்க கேட்ட நேரம் ரெண்டு பேரும் வராங்க, போங்க போயி அவங்களோட பேசிட்டு வாங்க” மாரி சொன்னார்
“ச் ச சே அப்படி இல்லப்பா, அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க, அத பார்த்து தான் நான் அவங்கள பத்தி கேட்டேன், பேசி பழகிக்க இல்ல”
“ஓ அப்படியா! அவங்க எப்பவுமே அப்படித்தான், கிண்டலா பேசிப்பாங்க. புத்திசாலி பையன் கூட” மாரி குட்டி சர்டிஃபிக்கேட் குடுத்தார்
“மாரி! எனக்கு ஒரு சந்தேகம், கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது. கேட்கலாம?”
“யார பத்தி சார்? என்ன பத்தியா?” மாரி சற்று விரைப்பாக கேட்டார்
“அந்த ரெண்டு பேர் பத்தி தான்” அமல் சொல்ல
“என்ன சார் எப்பவுமே அவங்கள பத்தி தான் யோசனையா? பேசி பழக போறது இல்லைன்னு சொன்னீங்க, அப்புறம் என்ன” மாரி குழம்பினார்
“தினமும் ரெண்டு பேரும் இங்க வராங்க, ஜாலியா பேசிக்கறாங்க. முக்கால்வாசி நேரம் அந்த பையனோட அம்மாவப் பத்திதான் பேசராங்க, அவ்வளவு பாசமா இருக்காங்க ஆனா அந்த அம்மாவ நான் பார்த்ததே இல்லை, இன்னைக்கு கூட லீவு நாள் தான், ஆனா இவங்க ரெண்டு பேர் மட்டும் தான வந்திருக்காங்க!
அவங்க அம்மா ஏன் வரது இல்லை”
“அந்த அம்மா எப்படி சார் வரும்” மாரி ஆச்சரியமாய் கேட்டார்
“ஏன் அவங்க முடியாதவங்களா? இல்லை எதாவது மாற்றுத் திறனாளியா? அமல் கவலையாய் கேட்டார்
“இல்லைங்க, அப்படிலாம் எதும் இல்லை” மாரி சொன்னார்
“அப்புறம் என்னப்பா பிரச்சனை?” அமல் கொஞ்சம் பொறுமையில்லாமல் கேட்டார்
“அந்த அம்மா இறந்து ஆறு மாசம் ஆச்சு”
“என்ன சொல்லற மாரி, உளராத! அவங்க அம்மவா பத்தி தான் தினமும் நிறையா பேசுவாங்க நான் கேட்டுருக்கேன்” அமல் மாரியை திருத்தினார்.
“நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன், வருத்தம் தெரியாம இருக்க அந்த அம்மா அவங்க கூட இருக்கா மாதிரியே பேசி வாழ பழகிக்கராங்க”
ஒரு வார்த்தை கூட பேசாமல் அமல் நடக்க ஆரம்பித்தார். கவலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட ஆரம்பித்தார். நடையில் தெளிவு தெரிந்தது
சூழ்நிலை கைதிகளாய் வாழ்வதை விட, வாழ்வை மீட்டெடுப்பது மேல் என்பதை இக்கதை உணர்த்துகிறது.
உங்களின் புரிதல் மிகச் சரி. நன்றி
Amazing👏👌, It relates to our real-life experiences and memories. The unexpected twist made it even more impactful! No matter what happens, we have to move on.
Eagerly awaiting your next masterpiece🥳..
Thanks for your appreciation. will try to do better